சில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerankalil Sila Manitharkal)
வெகுஜன தளத்தில் இலக்கியபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன்; அதற்குத் துணைநின்ற படைப்புகளில் முதன்மையானது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல். சமூகம் மறைமுகமாக ஈடுபடும் மீறல்களையும் வெளிப்படையாகப் போற்றும் ஒழுக்கமதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்பு இது. தன்னுடையதல்லாத காரணத்தால் பழிக்கு ஆளான பெண்ணைப் பொதுச்சமூகம் எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதையும் அந்த உதாசீனத்தை அவள் எப்படித் தனது சுயமரியாதையாலும் சுயச்சார்பாலும் எதிர்கொள்கிறாள் என்பதையும் பரிவுடனும் பெருமிதத்துடனும் இந்த நாவலில் சித்திரிக்கிறார் ஜெயகாந்தன். கலைநோக்குடனும் சமூகப் பார்வையுடனும் எழுதப்பட்ட இந்த நாவல் பெண்ணின் உளவியலையும் நேர்த்தியாகப் புலப்படுத்துகிறது. ‘காலத்தின் அலைகளால் எற்றுண்ட’ பெண்ணான கங்கா எல்லாக் காலத்திலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அவலத்தின் அடையாளமாக நிற்கிறாள். ஒவ்வொரு காலத்திலும் பெண் நடத்தும் சமரைச் சொல்வதாலேயே இந்த நாவலின் மையமும் பொருளும் காலங்கடந்தும் நிலைபெறுகின்றன. அதுதானே ஒரு கிளாஸிக் படைப்பின் இலக்கணம்! அந்த இலக்கணத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தெளிவாக முழுமைப்படுத்துகிறது.